சிங்கப்பூரில் சிறுவர் கதை நூல் வெளியீடு

சிங்கப்பூரில் சிறுவர் கதை நூல் வெளியீடு

செய்தியாளர் வி.புருஷோத்தமன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கம், அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய சிறுவர்களுக்கான 4 கதை நூல்கள் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 12ம் தேதியன்று சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியது. சி.குணசேகரன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கிய இவ்விழாவிற்கு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார். ஆ.பழனியப்பன் எழுத்தாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். பள்ளி மாணவர்களைக்‌ கொண்டே இச்சிறுவர் நூல்களைப் படித்து ஆய்வு செய்ய வைத்த‌து பாராட்டைப் பெற்றது. மாணவர்கள் மிகச் சிறப்பாகத் திறனாய்வு செய்தனர். உணவு மழைத் தீவு என்ற நூலை பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவி பரக்கத்து நிஹாவும், காஞ்ஜியும் பாட்ஜியும் என்ற நூலை பூச்சுன் உயர்நிலைப் பள்ளி மாணவி இளந்தமிழ் எனும் யாழினியும், பச்சைக் கிளி இளவரசன் என்ற நூலை செங்காங் உயர்நிலைப் பள்ளி மாணவன் இளங்கதிரும் திறனாய்வு செய்தனர். சிங்கப்பூர் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் டாக்டர் சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தார். முதல் நூலை சிங்கப்பூத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் தேவேந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். நூலாசிரியர் ஆல்பர்ட் பெர்னாண்டோ இந்நூல்கள் எழுதத் தூண்டிய சிந்தனையைத் தமது ஏற்புரையில் பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப்.அருணாசலம் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தியதோடு வரவேற்புரையும் ஆற்றினார். செயலாளர் கவிஞர் ராம வைரவன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.