தேசிய கதை சொல்லும் போட்டி / National Tamil Story Telling Competition

தமிழ் மொழி விழா 2009

நகரெங்கும் தமிழ் முழக்கம் நாள் முழுவதும் கொண்டாட்டம்
(தமிழ் முரசு, 5/4/2009)

மாணவர்களின் தமிழ் முழக்கத்துடன் காலையிலேயே தொடங்கி விட்டது தமிழ் மொழி மாதக் கொண்டாட்டம்.

பீஷான் சமூக மன்றத்தில் காலை 10 மணி அளவில் பெற்றோரும் ஆசிரியர்களும் பொதுமக்களும் மாணவர்களின் கதைகளைக் கேட்க திரண்டனர்.

அமெரிக்காவிலிருந்து வந்த ஸ்வாதி விஜயன்(10) ஆர்வத்துடன் கொஞ்சும் தமிழில் சொன்ன கதை அனைவரையும் கவர்ந்தது.

இவரின் வீட்டு மொழி தெலுங்கு. தமது மகள்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க அம்மாவும் தமிழ் படிக்கிறார்.

அசர வைத்த மேடைப் படைப்பு

(தமிழ் முரசு, 5/4/2009)

துடுக்கான பேச்சு, எடுப்பான நடை ஆழமான கருத்துகள், அளவான நகைச் சுவை, தடையற்ற பேச்சு அனைத்தும் பால சரவணன் லோகநாதனுக்கு தேசிய கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுத் தந்தது.

“பானை வாங்கலியோ, பானை வாங்கலியோ” என்று கூவிக்கொண்டே கதையை துவங்கிய பால சரவணன் பல குரல்களில் பேசி அசத்தினார்.

தமிழ் மொழி விழாவின் முதல் நிகழ்ச்சியாக இடம் பெற்ற இந்த கதை சொல்லும் போட்டியில் தொடக்கநிலை 4 முதல் 6 வரை பயிலும் 30 மாணவர்கள் அருமையாகக் கதைகள் சொல்லி அனைவரையும் அசத்தினர்.

தமிழர் பேரவையும், பீஷான் இந்திய இளைஞர் நற்பணி அமைப்பும் இணைந்து இப்போட்டியை நடத்தியது.

பீஷான் சமூக மன்றத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் தொடங்கிய போட்டி ஒரு மணி வரை நீடித்தது.

"மாண்வர்களின் விறுவிறுப்பான கதைகளில் நேரம் போனதே தெரியவில்லை," என்றார் திருமதி முருகேஸ்வரி.

தமது இரு குழந்தைகளுடன் நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த இவர், இத்தகைய நிகழ்ச்சிகள் பிள்ளைகளுக்கு தமிழ் பேச ஆர்வம் ஊட்டுகின்றன என்றார்.