1 Sep 2019
தமிழவேல்
நாட்டு நிர்மாணத்தில் தமிழர் பேரவையின் பங்கு முக்கியமானது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூர் சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழர் பேரவை, தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்து, தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியுள்ளது. தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சி, சிண்டாவுடன் இணைந்து மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தல், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்க் கலைகள், கலாசார, மரபுடைமை குறித்து ஆழ்ந்து அறிந்துகொள்ளச் செய்தல் எனப் பல வழிகளில் தமிழர் பேரவை இயங்கி வருகிறது,” என்று அவர் கூறினார்.
தமிழர் பேரவையும் அதன் இணை அமைப்புகளும் இணைந்து நேற்று அடித்தள அமைப்பு மன்றத்தில் சிங்கப்பூரின் 54வது தேசிய தின விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ‘ஒரு குடையின் கீழ் இணைவோம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சருமான திரு ஹெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரை ஆற்றினார்.
“சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி வரும் தருணத்தில், நமது மூதாதையர்களும் முன்னோடிகளும் ஒன்றிணைந்து எப்படி நவீன சிங்கப்பூரைக் கட்டமைத்தனர் என்பதை நினைவு கூருவது பொருத்தமானது,” என்றார் அவர்.
தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி, சிண்டா, இளம் சீக்கியர் சங்கம், நற்பணிப் பேரவை போன்ற அமைப்புகளுடன் இணைந்து இதர இந்தியச் சமூகங்களின் மேம்பாட்டிற்கும் தமிழர் பேரவை பாடுபட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“இளம் வயதில் ரொட்டி பரோட்டா எனக்கு மிகவும் பிடித்தமான இந்திய உணவாக இருந்தது. அமைச்சர் சண்முகத்துடன் சேர்ந்து பல இந்திய உணவு வகைகளை நான் சுவைத்துள்ளேன்,” என்றும் அவர் சொன்னார்.
சில மாதங்களுக்குமுன் சீனப் பிரதமர் லீ கெச்சியாங் சிங்கப்பூர் வந்திருந்தபோது அவரை லிட்டில் இந்தியா வழியாகத் தாம் அழைத்துச் சென்றதாகவும் அப்போது சாலையில் கட்டப்பட்டு இருந்த ஒளியூட்டுத் தோரணங்களை அவர் கண்டு ரசித்ததாகவும் திரு ஹெங் கூறினார்.
திரு கெச்சியாங்கை மீண்டும் தாம் சந்தித்தபோது, அந்த லிட்டில் இந்தியா பயணத்தைத் தாம் மிகவும் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுச் சொன்னதை திரு ஹெங் நினைவுகூர்ந்தார்.
கடந்த 1951ஆம் ஆண்டு அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து முரசு நாளிதழின் நிறுவனர் கோ.சாரங்கபாணி தொடங்கி வைத்த தமிழர் பிரதி நிதித்துவ சபை, பின்னர் 1980களில் திரு ஜி.கந்தசாமி தலைமையின்கீழ் தமிழர் பேரவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 40 இணை அமைப்புகள் தமிழர் பேரவையின்கீழ் உள்ளன.
“கடல் கடந்து வந்த நமது முன்னோர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு ஆகியவற்றைத் தங்களுடன் கொண்டு வந்து சிங்கப்பூரில் நமது கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றையும் உடன் எடுத்து வந்து இங்கு நிலைநாட்டினர்,” என்று கூறினார் தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ.பாண்டியன்.
நிகழ்ச்சியில் தமிழர் பேரவையும் அதன் இளையர் பிரிவும் இணைந்து உருவாக்கிய சமூகச் செயலி (KURI.SG) ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் நிகழ்வுகள், திறனாளர்கள், தேசிய நூலகத்தின் பரிந்துரைகள் போன்றவற்றை இந்தச் செயலியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
சமூகப் பிரச்சினைகள் குறித்து தமிழ் இளையர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் விளைவாக இச்செயலி உருவாக்கப்பட்டதாகக் கூறினார் தமிழர் பேரவையின் இளையர் பிரிவுத் தலைவர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன், 26.