144 மணிநேர தொடர் வாசிப்பு நிகழ்ச்சி / 144 hour Reading Marathon

144 மணிநேர தொடர் வாசிப்பு நிகழ்ச்சி                                             

தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருக்கும் வாசிப்போம்! சிங்கப்பூர் 2009 இயக்கத்தின் ஒரு பகுதியாக 144 மணிநேர தொடர் வாசிப்பு நிகழ்ச்சி 100, Victoria Street-டில் உள்ள தேசிய நூலகத்தின் The Plaza வளாகத்தில் இடம் பெற்றுவருகிறது. புதிய தொடர் வாசிப்பு சாதனையைப் படைக்க முயற்சி செய்யும் இந்த நிகழ்ச்சியில் தமிழில் வாசிக்கும் ஒரே அமைப்பு தமிழர் பேரவையின் துணை அமைப்பான சிற்பிகள் மன்றம். ஜுலை 6-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை இருபதுக்கும் மேற்பட்ட சிற்பிகள் மன்ற உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக வாசித்தனர்.

"மேடையில் ஒலிவாங்கியின் முன்னே அமர்ந்து பலரின் முன்னிலையில் வாசிப்பது ஒரு புதிய அனுபவம். வாசிப்பதில் தவறு ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிப்பது ஒரு சவாலாகவே இருந்தது" என்று மாணவி புவனா குறிப்பிட்டார். சே.வெ சண்முகம், மா. இளங்கண்ணன், சிங்கை முகிலன், பொன். சுந்தரராசு, துரை மாணிக்கம், இந்திரஜித், கனகலதா போன்ற உள்ளூர் எழுத்தாளர்களும், தேசிய கல்வி கழக மாணவர்களும் எழுதியிருக்கும் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து சிற்பிகள் மன்றத்தினர் வாசித்தனர். எழுத்தாளர் செ.ப பன்னீர்செல்வம் தனது சொந்த கதைகளை வாசித்தது இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது.

"உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கும்போது சிங்கப்பூரர்களின் வரலாறு, வாழ்க்கை சூழல், வாழ்க்கை முறை போன்றவற்றை நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும் இந்தக் கதைகள் பாலமாக அமைகின்றன" என திருமதி தமிழ்செல்வி தன் கருத்தினை பகிர்ந்துகொண்டார்.

மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிற்பிகள் மன்றம் தமிழில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு 2008-ஆம் ஆண்டில் வாசி!நேசி! வாசகர் வட்டத்தை தொடங்கியது. கலைகள் வழி இந்திய இளையர்களை நல்வழி படுத்துதல், அவர்களை சமூகசேவையில் ஈடுபடுத்துதல், பரந்த உலகைப் புரிந்துகொண்டு முன்னேறுதல் - இவையே சிற்பிகள் மன்றத்தின் நோக்கங்கள். "144 மணிநேர தொடர் வாசிப்பு நிகழ்ச்சியில் வாசி!நேசி! வாசகர் வட்டம் பங்கெடுப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கிறது" என்று தேசிய நூலக வாரியத்தின் அதிகாரி K.S. மணியம் தெரிவித்தார்.

"இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவும் சிற்பிகளின் பற்றுதலும் தான். சமூக சேவைக்கு என நேரம் ஒதுக்கி, தங்களுக்கு பிடித்த கதைகளை நூலகங்களில் தேர்ந்தெடுத்து, அவற்றை வாசித்து பழகி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றி. தங்கள் திறமைகளை வெளிகொணர விரும்பும் இளையர்கள் லாபநோக்கமில்லாத சிற்பிகள் மன்றத்தில் சேர முன்வரலாம்" என சிற்பிகள் மன்ற தலைவர் திரு குணசேகரன், PB கூறினார்.

"உடற்குறை உள்ளவர்களும் வாசிக்கும் பழக்கம் வழி சமூகத்திற்கு பங்களிக்க இந்த நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" என்று இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கார்த்திகேயன் சென்னார்.

தமிழர் பேரவையின் தலைவர், Dr. R. தேவேந்திரன், PBM உட்பட பல சமூக தலைவர்களும் பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

144 hour Reading Marathon

As part of the Read! Singapore 2009 campaign, National Library Board organized the 144 hour reading marathon from 3 July to 9 July at The Plaza, National Library Building. This was an effort to create a new Singapore record. Various groups from all over the island were invited to read in the four official languages during this unique event.

Sirpigal Society, the youngest affiliate of TRC was the only group that read in Tamil. Over 20 members participated in this collective effort on July 6 from 7pm to 1am to demonstrate their love of reading especially in Tamil. It was a new experience for most members to read on a stage in front of an audience. Yet they rose to the challenge and read local author’s works for 6 hours nonstop.

The Sirpigal Reading Club was launched last year by TRC President Dr. R. Theyvendran, PBM. This is the next level of progression for the reading club. Sirpigal Society would like to express its heartfelt thanks to Read! Singapore 2009 project manager Mr K.S. Maniam, TRC President Dr. R.Theyvendran, PBM, community leaders, media and well wishers for all their support