தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ‘நீயா? நானா?’

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ‘நீயா? நானா?’

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 72வது நிகழ்ச்சியாக ‘நீயா, நானா’ என்ற நிகழ்ச்சி 27 ஜனவரி 2013 மாலை 7 மணியளவில் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது. திருமணத்திற்குப் பின் அதிகமாக சுதந்திரத்தை இழப்பது கணவனா மனைவியா என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 24 பேர் கலந்து கொண்டார்கள். பொதுவாக கணவனும் மனைவியுமாக அவர்கள் கலந்து கொண்டது மற்றொரு சிறப்பாகும்.

மனைவியே என்ற அணியில் பேசியவர்கள் குடும்பம் பிள்ளைகள் என்று அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் கணவன்மார்கள் பெரும்பாலும் எப்போதும் போல் இருந்து கொள்ள முடியும் என்றார்கள். குடும்பம் என்ற கோயிலைக் கட்டிக் காக்க அவர்கள் செய்ய வேண்டிய கடமை இருவருக்குமே பொதுதான் என்றாலும் கணவன்மார்களுக்கு அதில் அதிக சுமையில்லை என்று வாதிட்டார்கள்.

பொதுவாக பெண்கள் அடங்கியே வாழ்கிறார்கள். அவர்கள் சுயமாக எங்கும் சுற்றித் திரிய முடியாது .திருமணத்திற்குப் பின் அவர்கள் முழு சுதந்திரம் பெறுகிறார்கள். ஆண்களுக்குத்தான் கால்கட்டு போடவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆக ஆண்களே அதிகமாக தன் சுதந்திரத்தை இழக்கிறார்கள். ஒரு சட்டைகூட எங்கள் ஆசைக்கு அணியமுடியாது என்றும் வாதிட்டார்கள்.

ஆண்களின் சுதந்திரத்தை முறையோடு பாதுகாப்பதில் பெண்களும் பெண்களின் சுதந்திரத்தை முறையோடு பாதுகாப்பதில் ஆண்களும் கவனம் செலுத்தினாலன்றி குடும்பம் சிறக்காது. சுதந்திரம் இழக்கிறோம் என்பதைவிட குடும்பத்திற்காக நாமே விட்டுக் கொடுக்கிறோம் என்பதுதான் சரி. இதில் கருத்து வேற்றுமை நமக்குத் தேவையில்லை என்று இருவருக்குமான பொதுச் செய்தியுடன் இந்த விவாதம் ஒரு நிறைவுக்கு வந்தது.

படத்தில் இரு அணிகளின் வாதங்களையும் செவி மடுத்து அதன் நிறைகுறைகளை விவரித்தபடி நிகழ்ச்சியை முனைவர் ராஜி சீனிவாசன் தொகுத்து வழங்கினார்.