அரங்கம் கொள்ளாத கூட்டத்தின் கையொலியுடன் “லீ குவான் இயூ 90” கவிதைத் தொகுப்பை எஸ்.ஆர். நாதன் வெளியிட்டார்

அரங்கம் கொள்ளாத கூட்டத்தின் கையொலியுடன் “லீ குவான் இயூ 90” கவிதைத் தொகுப்பை எஸ்.ஆர். நாதன் வெளியிட்டார்

நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும் தந்தை எனவும் போற்றப்படும் நாட்டின் முதல் பிரதமர் மதிப்புமிகு திரு. லீ குவான் இயூ அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தயாரித்த 90 கவிதைகள் அடங்கிய இருமொழி நூல் கடந்த 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

குடியரசின் ஆறாவது அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அந்த நூலை அரங்கம் கொள்ளாத கூட்டத்தினரின் கையொலிக்கிடையே வெளியிட்டார்.

உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் முழு ஆதரவுடன் நடைபெற்ற வெளியீட்டு விழா மங்கள இசையுடன் தொடங்கியது. அருள்மிகு மாரியம்மன் கோயில், அருள்மிகு செண்பக விநாயகர் கோயில், அருள்மிகு வடபத்திர காளியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் நாதஸ்வர, தவில் வித்வான்கள் ஒரு மணி நேர மங்கள இசையில் வந்திருந்தோரை நனைய வைத்தனர்.

திரு. எஸ்.ஆர். நாதன் வந்த பிறகு “சின்னஞ் சிறு கிளியே” எனும் பாடலுடன் மங்கள இசை நிறைவு பெற்றது. அதன் பிறகு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய மாணிவிகள் ஐஸ்வர்யா, சுமிதா ஆகியோரின் தமிழ் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

அப்சரஸ் நடனக் குழுவின் நடனங்களும், மலேசிய மணிமாறன், ஸ்ரீதேவராணி, சிங்கப்பூரின் திரு. விஷ்ணு பாலாஜி ஆகியோரின் பாடல்களும் விழாவுக்குச் சுவை சேர்த்தன.

திரு. லீ குவான் இயூ குறித்து தாங்கள் இயற்றிய கவிதைகளை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவும், பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பனும் படைத்தனர். மலேசியாவின் திரு. கோ. புண்ணியவான் எழுதிய கவிதையை திருமதி மீனா ஆறுமுகமும் இந்தியாவின் புலவர் அரங்க நெடுமாறன் இயற்றிய கவிதையை திரு. எஸ். ஜெகதீசனும் உணச்சி பொங்க வாசித்தனர். கவிதைகளை திரு. நாதன், ரசித்துப் பாராட்டினார்.

வரவேற்புரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் சிங்கப்பூரை மூன்றாம் உலக நாட்டின் நிலையிலிருந்து முதல் உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் திரு. லீ குவான் இயூ அவர்கள் என்றார். சிங்கப்பூரைத் தூய்மையாகவும் பசுமையாகவும் ஆக்கியவர். சிறப்பான உள்ளமைப்பு வசதிகளை ஏற்படுத்தியவர். உலகம் போற்றும் வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கியவர். உலகின் ஆகச் சிறந்த விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் ஏற்படுத்தியவர். ஊழலற்ற ஆட்சி, நேர்மையான அரசாங்கம், மக்களுக்குப் பணியாற்றும் அதிகாரிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம், திறமைக்கு முதலிடம் போன்ற கொள்கைகளால் சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர் என்றார்.

இத்தனை சிறப்புகளையும் கொண்ட திரு. லீ குவான் இயூ அவர்களைச் சிறப்பிக்க, மிகச் சிறுபான்மையினரின் மொழியான தமிழை அதிகாரத்துவ மொழியாக ஆக்கிய அவருக்கு தமிழ்ச் சமுதாயத்தின் நன்றிக் கடனாக தமிழ்க் கவிதைகளால் ஆன “லீ குவான் இயூ 90” தொகுப்பு நூலை வெளியிடுவதாக திரு. ஆண்டியப்பன் தெரிவித்தார்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் சேர்ந்த 90 கவிஞர்கள் கவிதைகளை எழுதியுள்ளனர்.

வாழ்த்துரைத்த ஜோஸ்கோ பயண நிறுவன உரிமையாளர் திரு. நாகை தங்கராசு, பல ஆண்டுகளுக்கு முன் தாம் மக்கள் செயல் கட்சியின் இணைந்து செயல்பட்டபோது திரு. லீ குவான் இயூ அவர்களைத் தாம் சந்தித்த வேளைகளை நினைவுகூர்ந்தார். திரு. தங்கராசுவுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் சிறப்புச் செய்தார்.

நூல் வெளியிடுவதற்குமுன் திரு. நாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து திரு. நாகை தங்கராசு சிறப்புச் செய்தார்.

நூலை திரு. நாதன் வெளியிட்ட பிறகு, நூல் அச்சிடும் செலவு உள்பட வெளியீட்டு விழாவின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்ட ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ் வள்ளல் திரு. நாகை தங்கராசு முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு நன்கொடை வழங்கியவர்களுக்கு நூலை திரு. நாதன் வழங்கினார்.

நன்கொடையாகத் திரட்டப்பட்ட $ 33,501,00 ஸ்ரீ நாராயணா மிஷின் முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. அதனை அந்த இல்லத்தின் செயலாளர் திரு. மோகனதாஸ் பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீட்டிற்குப் பிறகு, கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சென்னைப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரை ஆற்றினார். கவிதைகள் சிறப்பாக இருப்பதற்குப் பாட்டுடைத் தலைவன் சிறந்த மனிதராக, சிறந்த தலைவராக இருப்பதுதான் காரணம் என்றும் அவருடைய நற்பண்புகள் அனைத்தும் கவிதைகளில் பளிச்சிடுகின்றன என்றும் அவர் குறிப்பிடட்டார். பேராசிரியர் மறைமலைக்கு, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவர் சிறப்புச் செய்தார்.

எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திரு. சுப. அருணாசலம் நிகழ்ச்சியை நெறிப்படுத்த துணைச் செயலாளர் திரு. இராம. வயிரவன் நன்றி கூறினார்.

நிக்ழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக நூல் வழங்கப்பட்டது.