மாணவர்கள் பங்ககற்ற தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 70வது பட்டிமன்றம்

மாணவர்கள் பங்கேற்ற தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 70வது பட்டிமன்றம்

02 டிசம்பர், 2012 மாலை 6 மணியளவில் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு இன்றைய பிள்ளைகளில் பலர் அம்மா செல்லமே அப்பா செல்லமே என்பதாகும்.

அம்மா செல்லமே என்ற அணியில் புங்கோல் உயர்நிலைப் பள்ளியின் மாணவிகளான செல்வி எஸ்.வித்யா, செல்வி எஸ். அனிதா ஆகயோரும் கிரசண்ட் உயர்நிலைப் பள்ளியின் மாணவி செல்வி மரிய வினிதா ஆகியோரும் வாதிட்டனர்.

அப்பா செல்லமே என்ற அணியில் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியின் மாணவிகளான செல்வி எஸ். ஐஸ்வர்யா, செல்வி பி. ஐஸ்வர்யா, செல்வி நூருல் எல்மிரா ஆகியோரும் வாதிட்டனர்.

நடுவராக ஈசூன் தொடக்கக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி அ. மல்லிகா இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்.

பிறந்தது முதல் அந்தக் குழந்தை முகம் பார்க்கத் தெரியும்வரை அப்பாவின் பங்கு சொற்பமே. அம்மாவுக்குத்தான் தெரியும் அந்தக் குழந்தை ஏன் அழுகிறதென்று. ஓரளவு வளர்ந்த பின்தான் அப்பாவே வருகிறார். தாய்நாடு, தாய்மொழி என்றுதான் சொல்கிறோம். தந்தைநாடு, தந்தைமொழி என்று சொல்வதில்லை. ஏனென்றால் குழந்தை மட்டுமல்ல, நாடு மொழி எல்லாமுமே தாயின் அன்பில்தான் அறியப்படுகிறது. பணிப் பெண்களிடம் அவர்கள் வளர்க்கும் பொறுப்பைக் கொடுத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள். ஏன்? அந்தப் பிள்ளையின் எதிர்காலத்திற்காக. வேலைக்குப் போகும்போதே பிள்ளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ன ஊட்ட வேண்டும், எப்போது ஊட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறார்கள். அம்மாவின் பெருமை பேசும் எத்தனையோ பாடல்கள் உண்டு. அப்பாவின் பெருமை பேசும் திரைப்படப் பால்கள் மிகவும் சொற்பமே என்று வாதிட்டனர்.

அம்மா செல்லமெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் பணிப்பெண் செல்லம். ஒப்பிட்டுப் பேசிப் பேசி பிள்ளைகளை தன்னம்பிக்கை இழக்கும்படிச் செய்வது அம்மாக்கள்தான். மதிப்பெண் குறைத்து வாங்கினால் தண்டிப்பது அம்மாக்கள்தான். நேரம் கழித்து வீடு திரும்பினால் காரணம் கேட்காமல் சந்தேகப் படுவது அம்மாக்கள்தான். செலவுக்குக் கூட 2 வெள்ளிக்கு மேல் அம்மா தரமாட்டார். கடைத் தெருவுக்கு வரும் குடும்பங்களைக் கவனியுங்கள். பெரும்பாலும் பிள்ளைகள் அப்பாவின் அரவணைப்பில் அல்லது அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அம்மாக்களுக்கு விசாலமான அறிவு இருப்பதில்லை. பெரும்பாலான தாய்மார்கள் குறுகிய மனப் போக்கில் செயல்படுகிறார்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன உளைச்சலை பிள்ளைகள் மீது வெளிப் படுத்துவதும் அம்மாக்கள்தான். பெற்றோர் பிள்ளைகள் கூட்டங்களுக்கு பள்ளிக்கு வரும் பெரும்பாலான பிள்ளைகள் அப்பாவோடுதான் வருகிறார்கள். தீடீரென்று ஏற்படும் பெரிய பெரிய செலவுகளை அம்மாக்களால் சுமக்க முடியாது. ஒரே பொருளை அப்பா வாங்கினால் நயமாக வாங்குவார். அம்மா வாங்கினால் மட்டமாகத்தான் வாங்குவார். அதனால்தான் பெரும்பாலான பிள்ளைகள் அப்பா செல்லமாக இருக்கிறார்கள்.

திருமதி மல்லிகா அவர்கள் தீர்ப்புச் சொல்லும்போது அம்மாக்கள்தான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்றாலும் உளகரீதியில் அவர்களுக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருப்பவர் அப்பாதான். அப்பாவால் தூர நோக்கில் பார்க்க முடியும் அதோடு அப்பாவே பெரும்பாலான பிள்ளைகளுக்கு நம்பத் தக்கவராகத் தெரிகிறார். ஆகவே இன்றைய பிள்ளைகளில் பலர் அப்பா செல்லமே என்று தீர்ப்பு வழங்கினார்.