தமிழர் இயக்கம் 47வது நாட்டுநாள் விழா / Singapore Tamils Movement 47th National Day Celebration

தமிழர் இயக்கம் 47வது நாட்டுநாள் விழா       

செய்தியாளர் வி.புருஷோத்தமன்

சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 47வது நாட்டு நாள் விழாவை செப்டம்பர் முதல் தேதியன்று காலாங் சமூக மன்றக் கலையரங்கில் விருந்து, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடத்தியது. கா.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழா நாதஸ்வர மங்கல இசையுடனும் கவிஞர் இனியதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் இனிமையாகத் தொடர்ந்தது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் இயக்கச் செயலாளர் ந.நாராயணசாமி வரவேற்புரையாற்றினார். சிங்கப்பூரின் பிரபல நாட்டியக் கலைஞர் மணிமாறன் குழுவினர் திரை இசைப்பாடல்கள், பரதம், நாட்டுப் பாடல், கரகம், நாட்டியம் என அசத்தினர். கரகத்தை தலை மேல் வைத்துக் கொண்டே தரையில் உள்ள கைக்குட்டையைக் கண்களால் எடுத்து கரகக் கலைஞர் எடுத்து, பலத்த கரவொலி பெற்றார். விழாவின் சிறப்பு நிகழ்வாக சிங்கப்பூரில் நீண்ட நாட்களாக சிறந்த சமூக சேவையாற்றி வரும் பிரமுகர்களைப் பாராட்டும் அங்கம் இடம்பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்து கொண்டார். அவர் தமது உரையில், சிங்கப்பூரில் தமிழர் எண்ணிக்கையில் சிறுபான்மையோராக இருப்பினும் தேசத் தலைவர்கள் வரிசையிலும் கல்வியாளர் தொகையிலும் தொழிலதிபர்களிலும் சிறந்து விளங்குவதாகக் குறிப்பிட்டார். தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன், நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு, வீ.எம்.கார்மேகம், சி.ஜெயக்குமார் ஆகியோரது சேவைகளைப் பாராட்டிப் பொன்னாடை, மலர் மாலை, நினைவுப் பரிசு அளித்து விக்ரம் நாயர் கவுரவித்தார். மிகச் சிறப்பான அறுசுவை சைவ, அசைவ விருந்துக்குப் பின்னர் கலந்து கொண்டவர்களிடை அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கல் நடைபெற்றுப் பரிசுகள் அளிக்கப்பட்டன. இயக்கத் துணைத் தலைவர் டாக்டர் வீ.செந்தமிழ்ச் செல்வன் நன்றி நவின்றார். சிங்கை வானொலி மூத்த படைப்பாளர் ரெ.சோமசுந்தரம் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார்.

Singapore Tamils Movement 47th National Day Celebration

The Singapore Tamils Movement celebrated its 47th National Day Celebration on 1st September at Kallang Community Club.

The Guest of Honour for this event was Mr Vikram Nair, MP for Sembawang GRC. Mr Nair in his speech said that though Tamils are a minority in Singapore, they still excel as National Leaders, educationalist and entrepreneurs.

One of the highlights of the event was honouring of some of those who had served and contributed to the Society.

Mr Vikram Nair honoured Dr R. Theyvendran, President, Tamils Representative Council. Ms Pushpalata Naidu, Mr V.M.Karmegam and Mr C. Jeyakumar also received this community honour from Mr Nair.