மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு

மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு விழா
20 ஆகஸ்டு 2012

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் வழங்கி வரும் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுகளை கவிஞர் முருகடியானும் திரு. எஸ்.எஸ். சர்மாவும் வென்றுள்ளனர். 20அம் ஆகஸ்டு 2012, மாலை சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற விழாவில் அவர்கள் இருவருககும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. தினகரன் பரிசுகளை வழங்கினார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கடந்த ஆண்டு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியதால் இந்தப் புத்தகப் பரிசளிப்பு விழாவை நடத்தவில்லை. அதனால் 2011, 2012 ஆகிய இரு ஆண்டுகளுக்குமான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

2011ஆம் ஆண்டுககன பரிசு 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது. அந்த மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட ஏழு நூல்கள் பரிசீலனைக்கு வந்தன. கவிஞர் மு. தங்கராசனின் “இன்பத் திருநாடு”, கவிஞர் நூர்ஜெஹான் சுலைமானின் “உயிர் நிலவு”, கவிஞர் இராம. வயிரவனின் “கவிதைக் குழந்தைகள்”, கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யாவின் “கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை”, கவிஞர் முருகடியானின் “சங்கமம்”, கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தியின் “தூரத்து மின்னல்”, கவிஞர் மாதங்கியின் “நேற்று பிறந்து இன்று வந்தவள்” ஆகியவை அந்த நூல்கள்.

இவற்றை மதிப்பிட்டுப் பரிசுக்குரிய நூலைப் பரிந்துரைக்க சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், மலேசியாவின் முனைவர், கவிஞர் முரசு நெடுமாறன், தமிழகத்தின் புலவர் இளஞ்செழியன் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இரண்டு நடுவர்கள் கவிஞர் முருகடியானின் “சங்கமம்” நூலுக்கும் ஒரு நடுவர் கவிஞர் வயிரவனின் “கவிதைக் குழந்தைகள்” நூலுக்கும் பரிந்துரை செய்தனர். பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் கவிஞர் முருகடியானின் “சங்கமம்” நூலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டுக்கான 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை நூலுக்கு வழங்கப்பட்டது. அந்த மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட ஐந்து நூல்கள் வந்தன. திரு. ஷா நவாஸின் இரண்டு நூல்கள் “ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்”, “துண்டு மீனும் வன்முறைக் கலாச்சராமும்”, திரு. எஸ்.எஸ். சர்மாவின் “கடல் கடந்த தமிழ்க் கலாச்சாரம்”, முனைவர் இரத்தின வேங்கடேசனின் “நற்றமிழ் விருந்து”, திரு. ஜே.எம். சாலியின் “முத்திரை நினைவுகள்” ஆகியவை அந்த நூல்கள்.

இவற்றை மதிப்பீடு செய்து பரிந்துரைத்த நடுவர்களான சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன், மலாயாப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் முனைவர் வெ. சபாபதி, சென்னை ராணி மேரிக் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் ஒருமனதாக திரு. சர்மாவின் “கடல் கடந்த தமிழ்க் கலாச்சாரம்” நூலைப் பரிசுக்குரியதாகப் பரிந்துரைத்தனர்.

சிறப்பு விருந்தினர் திரு. இரா. தினகரனுக்கு எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் சிறப்புச் செய்து நினைவுப் பொருளை வழங்குகிறார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. தினகரன் பரிசு பெற்றவர்களைப் பாராட்டிய அதே வேளையில் பரிசு பெறாதவர்கள் தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து எழுதி அடுத்த முறை பரிசு பெற முயல வேண்டும் என்று கூறினார்.

நடுவர்களாப் பணியாற்றிய மலேசியாவின் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறனும் சிங்கப்பூரின் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பனும் தங்கள் பரிந்துரைக்கான காரணங்களை விளக்கிப் பேசினர்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அள்ளி, அள்ளிக் கொடுத்த ஆனந்த பவன் திரு. மு.கு. இராமச்சந்திராவுக்கு எழுத்தாளர் கழகம் எழுப்பியுள்ள நினைவுச் சின்னம் இந்தப் புத்தகப் பரிசு என்றார். இதற்கு நிதியாதரவு வழங்கும் ஆனந்த பவன் குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆனந்த பவன் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி பானுமதி இராமச்சந்திரா, திருமதி பரமேஸ்வரி, திரு. வீரன், திருமதி வீரன். ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர் திரு. சி. குணசேகரனின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு. சுப. அருணாசலம் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் திரு. இராம. வயிரவன் நன்றி கூறினார். திரு. சுப. அருணாசலமும் திரு. வயிரவனும் நிகழ்ச்சி நெறியாளர்களாகப் பணியாற்றினர்.

 

கவிஞர் முருகடியானுக்குச் சிறப்புச் செய்து பரிசு வழங்குகிறார் திரு. தினகரன்

 

சிங்கப்பூரில் புத்தகப் பரிசு விழா

 

The Association of Singapore Tamil Writers with the support of Ananda Bhavan Restaurant has been giving away the M.K. Ramachandra Memorial Book Prize to deserving Tamil writers. For 2011, poet Murugadiyan’s “Sangamam” – a collection of poems won the prize. For 2012, Mr Sarma’s “Kadal Kadantha Thamizh Kalaachaaram” - a collection of essays made the cut. The prizes were presented by Nominated Member of Parliament Mr R Dinakaran.