செய்யும் செயல்களே சிறந்த யோகம்' - உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் திரு SKM மயிலானந்தன் பேச்சு / 'Life is best Yoga’ – Speech by Mr SKM Maeilanandhan, World Community Service Centre

'செய்யும் செயல்களே சிறந்த யோகம்' - உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் திரு SKM மயிலானந்தன் பேச்சு

மே 5, 2012 சிங்கப்பூர்

சிங்கப்பூரைச் சார்ந்த அனைத்து எளிய முறைக் குண்டலினி யோகா மன்றங்களும் இணைந்து பிஜிபி திருமண மண்டபம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் மே 05, 2012 அன்று 'வாழ்வின் மேன்மையும் மனவளக் கலையும்' என்ற தலைப்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. திருமதி பவானி ஸ்ரீதர் அவர்கள் இறை வணக்கமும், குரு வணக்கமும் பாட விழா இனிதே தொடங்கியது. விழாவிற்கு வந்த அனைத்து பொது மக்களையும் திரு அதிகாரிப் பிள்ளை அவர்கள் வரவேற்று விழாவின் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரவீந்திரன் அவர்கள், எளிய முறைக் குண்டலினி யோகா எனப் படும் மனவளக் கலை யோகாவை பயிலத் தொடங்கிய நாள் முதல், தமக்கும் தமது குடும்பத்தார்க்கும் ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களைத் திறம்பட விளக்கினார். அதனை தாம் தொடர்ந்து பயின்று பயன் கொள்ளப் போவதாகவும் அறிவித்ததுடன், சிங்கப்பூரில் வாழும் சூழ்நிலைகளுக்கு, மனவளக்கலை எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அவருடைய சிறப்புரை அமைந்திருந்தது. உலக சமுதாய சேவா சங்கத்தின் சென்னைப் புறநகர் மண்டலத்தைச் சார்ந்த திரு சேர்மா செல்வராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தமிழகத்தில் உலக சமுதாய சேவா சங்கம் ஆற்றி வரும் பணிகளை எடுத்துக் கூறி, தாம் வாழ்ந்து மகிழ்ந்த சிங்கப்பூரிலும், இப்பணிகள் செவ்வனே நடை பெற வேண்டுமென்றும், அதற்கு விழாவில் கலந்து கொண்டுள்ள அனைத்து பொது மக்களும், முழு அளவில் பங்கேற்று பயன் பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

விழாவின் சிறப்புரையாக 'வாழ்வின் மேன்மையும் மனவளக் கலையும்' என்ற தலைப்பில், தமிழகத்தைச் சார்ந்த புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களில் ஒன்றான எஸ்கேஎம் (SKM) குழும நிறுவனரும், உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவருமான திரு SKM மயிலானந்தன் அவர்கள், சொற்பொழிவாற்றினார். தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் அவருடைய உரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. சிறிய மளிகைக்கடையில் தொடங்கிய தமது வாழ்க்கை, தமது கடின உழைப்பு மற்றும் நேர்மையின் மூலம், இன்று வருட வர்த்தகம் ஆயிரம் கோடி ரூபாய் (சுமார் சிங்கப்பூர் வெள்ளி 250 மில்லியன்) அளவுக்கு தமது குழுமம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தனது புதல்வர்களிடம் குழுமப் பணிகளை ஒப்படைத்து விட்டு, முழு நேரப் பணியாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பணித்தவாறு, உலக சமுதாய சேவா சங்கத்தலைவராக தமது கடமைகளை செயலாற்றி வருவதாக குறிப்பிட்டார். தம்முடைய உரையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய 'செயலுக்கு விளைவு' என்னும் பேருண்மையை, வாழ்கை நெறிமுறைகளாகக் கடைப்பிடித்தால் அனைவருடைய வாழ்க்கையும் செம்மையாக இருக்குமென்றும், அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும, அவர்தம் குடும்பமும், சமுதாயமும் அமைதியாகவும் இனிமையாகவும் திகழுமென்றும் குறிப்பிட்டார். அதற்கு அடிப்படையாக உடல் நலமும், மன வளமும் அவசியமென்ற கருத்தை வலியுறுத்தியே உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் அமைந்துள்ள மனவளக் கலை மன்றங்கள், வலிவான உடல் நலத்திற்கு 'எளிய முறை உடல் பயிற்சி', நீண்ட நாள் உயிர் வாழ உதவும் சூக்கும கலையான 'காயகற்பம்' என்னும் பயிற்சியையும், மனம் இனிமையாகவும் அமைதியாகவும் இருக்க தியானப் பயிற்சிகளையும் உள்ளடக்கிய சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாகக் கூறினார். இந்தப் பயிற்ச்சிகளை முறையாகப் பயின்று செயலாற்றி வருவதன் மூலம், அனைவரும் தம் கருமங்களையே (செயல்கள் என்பதற்கான வடமொழிச் சொல்) யோகமாக மாற்றி கொள்ளலாம். இதனையே 'கருமயோகம்' என வேதங்களும் உபநிடத்துகளும் கூறுவதாக, தகுந்த மேற்கோள்களுடன் எடுத்து விளக்கினார்.

இந்த உயரிய கருத்து உலகம் முழுவதும் பரவும் வகையில் தற்பொழுது தமிழ்நாட்டில் 14 மாதிரி கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் இலவசமாக மனவளக் கலை பயிற்சிகளை அளிக்க உலக சமுதாய சேவா சங்கம் தொடங்கியுள்ள 'கிராம சேவைத் திட்டம்' பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் அடையும் வெற்றியானது, ஒரு பெரிய விழிப்பை மக்களுக்கு உண்டு செய்து, உலகமே வியக்கும் வகையில் அமையுமென எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். கர்மயோகத்தின், அதாவது நல்ல செயல்களின் பயனாக நல்ல விளைவுகளே வருமென்பதை ஆழமாக உணர்த்தும் வகையில் அவருடைய நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சு, விழாவிற்கு வந்த அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்து நின்றது.

இறுதியாக, உலக சமுதாய சேவா சங்கத்தின் சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளர் திரு விஸ்வலிங்கம் அவர்கள் நன்றி நவில, விழாவிற்கு வந்த அனைவரும் தீவிலுள்ள மனவளக்கலை மன்றங்களின் முகவரிகளையும் செயல்படும் நேரங்களையும் குறித்துக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினர்.

 

'Life is best Yoga’ – Speech by Mr SKM Maeilanandhan, World Community Service Centre
May 05, 2012 Singapore

Simplified Kundalini Yoga (SKY) Organisations of Singapore jointly organized a special lecture on ‘Prosperity of life with Kundalini Yoga’ on Saturday, 5th May 2012 at Sri Srinivasa Perumal Temple, PGP Wedding Hall. The event commenced with Mrs Bhavani Sridhar singing prayer to the Almighty and Guru. Mr Athikari Pillai, welcomed the audiences and introduced Mr R Ravindran, former Member of Parliament, who was the special guest for the event. Mr R Ravindran shared  his special personal experiences on learning Simplified Kundalini Yoga with his family. He would be learning continuously and practicing the principles in his life to derive maximum benefits. He also stressed about the importance of learning this art to all Singaporeans given the living conditions here. Mr Serma R Selvaraj, from Chennai Sub-Urban Zone of World Community Service Centre, followed with his speech on details of the services rendered by WCSC in India. He has also clarified that WCSC activities should grow manifold at Singapore so that all public should lead their life peacefully.

Delivering special lecture on the occasion, in his own humorous style, Mr SKM Maeilanandhan, Chairman of SKM Group companies, one of the famous industrial houses in India, attracted the audiences. He narrated how his life grew from small grocery shop to the level of Rupees one thousand crores (Singapore Dollars 250 million approx) annual turnover now, on his sincerity and commitment. Handing over entire business to his Children, he was narrating how he is serving President of World Community Service Centre (WCSC) full time taking Swamiji Vethathiri Maharishi’s principles worldwide. In his speech, he attributed all his success to the principles of Swamiji Vethathiri Maharishi and explained that by practicing ‘Cause and Effect’ as a basic life principle, everybody can make their life itself as Yoga. He explained with the examples that this is what known as Karma Yoga, (Karma denotes to action in Sanskrit) what Vedhas and Upanishads ascribe in their literature.

Further, he elaborated that WCSC has taken 14 model villages at India and started a pilot programme called Village Service Project (VSP) to take forward the Swamiji principles. He was briefly narrating about the programme and expected that the success of VSP would be recognized worldwide. His thoughtful and humorous speech was received very well by the audience.

The event concluded with speech by Mr Viswalingam thanked the audiences, special guests and volunteer for making the event successful.

Tamils Representative Council conveys its appreciation and well-wishes to its affiliates, Simplified Kundalini Yoga Society and Vethathiri Maharishi Simplified Kundalini Yoga for its efforts and dedication in helping people to realise their purpose and principles of life.